Monday, April 12, 2010

அந்தக் கணப்பொழுது!

கந்தகப்புகை நாற்றம்

காதுடையும் வெடிச்சத்தம்,

சொந்தமாய், பழகிப்போய்

சோர்வடையா ஓர் களத்தில்..

இந்தாபிடி என்று

இழுத்திழுத்து அடி கொடுத்த

அந்த ஓர் கணத்தில்

அழகான ஒரு பெடியன்

வந்திறங்கி வடிவாகத்

தனை உணர்ந்து கொள்ளுதற்குள்..

அந்தோ பரிதாபம்..!

என் கையால்..

அட நண்பா..!

உன்னை நான் சந்தித்த

அந்தக்கணப் பொழுது

ஏன்ரா வேறிடமா

இருந்திருக்கக் கூடாதா..?

கள்ளுக்கடை எண்டா

கட்டாயம் நானுனக்கு

அள்ளி அஞ்சாறு போத்தால் வாத்திருப்பன்

விழுந்தாலும் தூக்கி விட்டிருப்பன்

வாந்தி எழுந்தாலும்

கையில் ஏந்தி எடுத்திருப்பன்,

உன்னை நான் சந்தித்த

அந்தக் கணப்பொழுது

ஏன்ரா வேறிடமா இருந்திருகக் கூடாதா..?

கால்ப்பந்தாட்ட

மைதானம் எண்டாலும்

கோல் போட்டா நீ

மனமுடைய மாட்டியெண்டால்

பட்டும் படாமல்

பயிற்றுனரும் அறியாமல்

விட்டிருப்பன் ஒரு பந்தை

வீரனே..!

மனுசனை மனுசன்

சந்தித்து உலகத்தில்

அனுசரிச்சுப் போக

எத்தனையோ இடங்கிடக்க

போர்க்களத்தில் தான் நாம்

சந்திக்க வேண்டுமென்று

ஆர் விதிச்சிருந்தானோ

அறியேன் நான் சத்தியமா..

சுடாமல் விட்டிருப்பன்

சுந்தரனே நான் விட்டால்

படாரென்றெனக்கு வெடி

வச்சிருப்பாய்

செத்திருப்பன்..!

'உன்னை நான் விட்டால்

உயிர் வாழ்க்கை எனக்கில்லை’

என்ன நான் செய்ய

போர்க்களத்து நண்பா

சொல்..?

உன்னை நான் சந்தித்த

அந்தக் கணப்பொழுது

ஏன்ரா

வேறிடமா இருந்திருக்கக் கூடாதா..?

1 comment:

போ. மணிவண்ணன் said...

கந்தகம் கலந்த காற்றும்.குருதி கலந்த நீரும்.பிணங்கள் மணக்கும் மண்ணும், அணுவை சுமந்த வானும், பார்த்து வயிறு எரிவதால்தான் சூரியன் கூடுதலாய் சுடுகிறான்.

Post a Comment