Thursday, April 29, 2010

அந்தமொன்றில்லா ஆனந்தம்!

அல்லி வாய் திறந்து
அலறுகின்ற இருட்பொழுதின்
கொல்லும் கனவுகள்
மிகக்கொடுமை..!

நெஞ்சுப்பயம் தவிர்க்க
பூட்டிவைத்த மனக்கதவு
கொஞ்ச நேரம்போய்
இரண்டாஞ் சாமத்தில்
உள் மனமெல்லாம் வேர்வை
காற்று வர
எள்ளவு கூட
இடமில்லாக் கதவிறுக்கம்,

திடீரென்றொரு காற்று,
எனக்கு பிடித்த மணம்,
படீரென்று பெருஞ்சத்தம்
மனக்கதவடிக்கிறது..!

பூட்டியதைச்சரி பார்த்து
சாவியை எடுத்துவைத்தேன்
ஆட்டியது காற்று
கதவு நிலை கழன்று விழ
அப்படியே பொடிப்பொடியாய்
கதவுடைந்து காலடியில்..

உள்ளே வேர்த்திருந்த
நீர்த்துளியில் அதுபட்டு
உள் மட்டுமல்ல
என் புறமும் குளிர்கிறது,
கணப்பொழுதில் மனம் முழுதும்
நீர்ச்சோலை, இசைக்குயில்கள்
மணம் மட்டும் எனக்கு
எப்போதும் பிடித்த மணம்,

உருவம் கூட இப்ப
ஓரளவு தெரிகிறது,
கரு கரென் றிருந்தாலும்
காற்றுக்கு பறக்கும் முடி,
பருவத்திற்கேற்ப நெற்றி எங்கும்
பாற் பருக்கள்,
கர்வமெல்லாம் பறக்கின்ற
கவனிப்பு, அது இருக்க

எக்கனவும் நுளையேலா
மனக்கதவுத் தாட்பாளை
சுக்கு நூறாய்ச்சிதற வைத்து
கதவினையும் பெயர்த்தெறிந்து
எப்படி இக்கனவு மட்டும்
நாளாந்தம் உள் வருது..?

ஆனால்

’இப்பொழுதும் கதவுச்சாவி
என் இடுப்பில்’

Friday, April 16, 2010

காமம்!

உணர்வுகளின் உட் கிளர்ச்சி
உள்ளடக்க முடியாத
கண நேரக் கண்கட்டு
காற்றழுத்த மண்டலம் போல்
புணருணர்வைப் புதைக்கேலா
புதியவகைக் காட்டாறு
நிண உடலின் ’தீப்பகுதி’
நிஜம் தெரியா எரிமலை வாய்,

பருவமற்ற காலநிலை
பண்பறியாப் பாற் குழந்தை
உருவமற்ற உள்ளீடு
உயிரவிக்கும் கொதி ஊற்று
எல்லாம் போய் எரிந்த பின்னர்
எழுகின்ற சா வெறுப்பின்
சொல்லேலாப் பெரு நரகம்
சுடலை வாழ் ஒரு ஞானி..!

Monday, April 12, 2010

அந்தக் கணப்பொழுது!

கந்தகப்புகை நாற்றம்

காதுடையும் வெடிச்சத்தம்,

சொந்தமாய், பழகிப்போய்

சோர்வடையா ஓர் களத்தில்..

இந்தாபிடி என்று

இழுத்திழுத்து அடி கொடுத்த

அந்த ஓர் கணத்தில்

அழகான ஒரு பெடியன்

வந்திறங்கி வடிவாகத்

தனை உணர்ந்து கொள்ளுதற்குள்..

அந்தோ பரிதாபம்..!

என் கையால்..

அட நண்பா..!

உன்னை நான் சந்தித்த

அந்தக்கணப் பொழுது

ஏன்ரா வேறிடமா

இருந்திருக்கக் கூடாதா..?

கள்ளுக்கடை எண்டா

கட்டாயம் நானுனக்கு

அள்ளி அஞ்சாறு போத்தால் வாத்திருப்பன்

விழுந்தாலும் தூக்கி விட்டிருப்பன்

வாந்தி எழுந்தாலும்

கையில் ஏந்தி எடுத்திருப்பன்,

உன்னை நான் சந்தித்த

அந்தக் கணப்பொழுது

ஏன்ரா வேறிடமா இருந்திருகக் கூடாதா..?

கால்ப்பந்தாட்ட

மைதானம் எண்டாலும்

கோல் போட்டா நீ

மனமுடைய மாட்டியெண்டால்

பட்டும் படாமல்

பயிற்றுனரும் அறியாமல்

விட்டிருப்பன் ஒரு பந்தை

வீரனே..!

மனுசனை மனுசன்

சந்தித்து உலகத்தில்

அனுசரிச்சுப் போக

எத்தனையோ இடங்கிடக்க

போர்க்களத்தில் தான் நாம்

சந்திக்க வேண்டுமென்று

ஆர் விதிச்சிருந்தானோ

அறியேன் நான் சத்தியமா..

சுடாமல் விட்டிருப்பன்

சுந்தரனே நான் விட்டால்

படாரென்றெனக்கு வெடி

வச்சிருப்பாய்

செத்திருப்பன்..!

'உன்னை நான் விட்டால்

உயிர் வாழ்க்கை எனக்கில்லை’

என்ன நான் செய்ய

போர்க்களத்து நண்பா

சொல்..?

உன்னை நான் சந்தித்த

அந்தக் கணப்பொழுது

ஏன்ரா

வேறிடமா இருந்திருக்கக் கூடாதா..?

மோனம்!


அறிவு தெரிந்த முதல்

இன்று வரை

உலகத்தில்

என்னால் எவரும்

’வருந்தி வயிறெரிந்ததில்லை

யாராலும் நானும் வருந்தவில்லை’

என்கின்ற

முழுமை நினைவோடு

கால் நீட்டிப் படுத்து

மெல்ல மெல்லக் கண்மூடி

திருப்தியாய் மூச்சை

இழுத்துவிட்டு நினைவுகளை

நிதானமாய்ச் சுமந்தபடி

’நீள் துயிலில் மூழ்குகையில்’,

கணமேனும்

மனமுடைந்து போகாதே..

கண் கலங்கி

கை கால் வேர்த்துதறக்

கடந்தவற்றை எண்ணாதே..

என்னோடு நீ இருந்த

இமை படக்கும் வேளைகளை

உன் கணவன் இயல்போடு

ஒப்பிட்டுப் பார்க்காதே..

’வேர்வை மணம் தூண்டும்

விறைப்பான நினைவுகளை’

போர்வைக்கு(ள்) அவன் மார்பில்

புரிவதற்கு முயலாதே..

உன் மகனை

என்னுருவாய்க் கண்டு

நெஞ்சோடு

இறுகப் பிடித்தணைத்து

செவி வருடி பாற்தனத்தால்

’என்னில் நீ மொண்ட

சுவை நரம்புக் கவிதைகளை

முதல் முத்தச் சிலிர்போடு ஊட்டு’

மனக்காயம்

ஆறித் தணியுமட்டும்

அழு

தெளிந்து சிரிப்பு வரும்,

பழங்கதை

என்றெண்ணிச் சிரிக்காதே

அழுகை வரும்..

வாழ்தலுக்கான ஆசை!

ஊரடங்கு பிறப்பித்த
உரத்த மெளனத்தைக் கலைத்தபடி
கந்தக வாசனை அடிக்கும்
எம் வளவுப் பதுங்குகுளிக்குள்
மறு பிறப்பை அண்மித்த
அலறலுக்கு மத்தியில்
அவன் பிறந்தான்,

வளர்ப்பதற்கென எமக்கு
வழங்கப்பட்டிருந்த சூழல்
மெல்லிய காற்று மேனியை வருட
ஏகாந்தமாய் இசையை முணுமுணுத்தபடி
கை வீசிச்செல்லும் காலமாய்
இருக்கவில்லை,

கிரந்தி எண்ணை சளித்தொல்லை என
ஒவ்வொரு வகுப்பாய்
பல்கலை வரைக்கும்
சும்மா அவனைக்கொண்டுவர
முடிந்ததில்லை

ஆட்டாத தலை பார்த்தும்
ஆட்கடத்தாத்தெரு பார்த்தும்
கோட்டைச் சமருள்ளும்
கொடிய இடப்பெயர்வுள்ளும்
மாட்டாது காப்பாற்றி வளர்த்து
அவன் வாழ்வு
மலர்கின்ற காலக்கனிவை
கொடுப்பனவை
தாகம் நிறைந்த தவிப்போடு
பார்த்திருக்க..
எங்கிருந்துவந்தீரோ வந்தீர்
மிக இயல்பாய்
பெயர் சொல்லிப் பிள்ளையினை
அழைத்து சிரித்தபடி
கன்னா மண்டையிலே வைத்து
விசை அழுத்திவிட்டு
என்ன பெரிதாய் நடந்து விட்டதென்பதுவாய்
உம் பாட்டில் போய்விட்டீர் கொடியவரே..

எங்கள் இத்தனை காலக்கனவுகளும்
காத்திருப்பும்
அணுஅணுவாய்ப்பார்த்து
ஆக்கிவைத்த அத்தனையும்
ஓர்குண்டில் உடைந்து சிதறி
பிடரி வழி
பெருங்குருதிப்பெருக்காக ஓட
கண் முன்னே
பிரண்டுகிடக்கிறான் பிள்ளை

வாழ்வின் ஒவ்வொரு அடியையும்
தூக்கி வைக்க
எத்துணை விலை கொடுத்தோம்
என்பது பற்றி
கொலை உணர்வை விரல் நுனியில்
வைத்திருக்கிற உமக்கு
எதுவுமே உறைத்துவிடப் போவதில்லைத்தான்
ஆயினும்
நெஞ்சால் ஒன்றும்மைக்கேட்கிறேன்

வாழ்தலுக்கான எங்களின்
இத்துணை ஆசையிலும்
மேலானதா
கொல்வதற்கான உங்களது
தேவை..

சாவோடிவை போகும்!

கண்ணுருட்டிக் கண்ணுருட்டிக்

களவாய் எனை எடுத்து

உன்னிலெனை இறுக்கி

ஒட்ட வைத்துயிர் குடித்து

ஏனென்றே விளங்காமல்

எனையெறிந்து நீ போக

நான் நின்று நடுத்தெருவில்

அழுவனென்றா நினைத்தாய்?

போ.....

மண்ணளவும் கவலையில்லை!

மரித்தது போல் ஆனாலும்

எண்ணி இதைப்பற்றிக் கவலையுறேன்.

வாழ்வோட்டம்

என்னை இரும்பாக மாற்றும்தான்!

ஆனாலும்...,

கடல் பார்க்க, மரம் பார்க்க

நாம் போன இடம் பார்க்க,

சொன்ன கதை எல்லாம்

சுத்திவரும்.

போகட்டும்..!

மனக்கொதிப்பு, உடற்கொதிப்பு

எல்லாமே உன்னிடத்தில்

தினம் தினம் நான் சமர்ப்பித்து

திருப்தி அடைந்த சுகம்

இனியில்லை என்றாலும்,

எனக்கென்ன இது பெரிய

பனிப்போரா?

"மறக்காமல் தினம் உருகிச்சாவதற்கு"

விதி வந்துந்தி எமை

வேறாக்கி..,

இன்னொரு கை

உன்மீது தொடுவதற்கு உரிமை கொண்டால்...?

நான் 'பெரிசாய்'

நொந்தொடிந்து போகேன்!?

நெகிழேன்!?

இருந்தாலும்...

சின்னக் கண்கலக்கம்

தொண்டை அடைத்தபடி

சொற்கள் வரமறுக்கும்

நெற்றிச் சுருக்கு விழும்

நெஞ்சடைக்கும், வாய் குளறும்.

பற்றுதல் அற்றுப்போம்

பார்வைத்திரை நடுங்கும்...

'சற்றுக் காலத்தில் என்

சாவோடிவை போகும்',

சிற்றின்பப் பிரிவில்லை

என அறிவேன். என்றாலும்

மற்ற மனிசரைப்போல்

கவலையுறேன்

நீ போடி

மௌனம்..!

ஓசைப்படாமல் இருத்தலில்

உள்ளேயே

ஓராயிரம் கோடி

உணர்வுகளைச் சுமந்தபடி

ஆசைகளை எல்லாம்

அனுபவித்துப் பார்க்கையிலே

’ஆண்டவனின் குணமே’

மெளனமே..

உனக்கிணையாய்

எந்த ஒரு குருவும்

எச்சகத்தும் இல்லையப்பா..!

’இசையின் உறை நிலையே

இங்கிதத்தின் அடிப்படையே’

எத்தனையோ உயிர் காத்த

ஆயுதமே..

“மனமொன்றி

முத்தாய்க் கணச்சூட்டில்

வேர்வைப் பூ பிறப்பெடுக்க

அகன்ற விழி கவ்வுதலால்

அரை விழியாய் ஆகிவிட

எல்லா உணர்வுகளும்

ஓர் மையப் புள்ளிக்குள்

தியான நிலையடைய

திசை மறந்து ஒன்றாகும்

உச்சக் கலவியின் பின்

உள்ளாடும் ஓர் அமைதி

மூச்சை உரை பெயர்க்கும்

முழுமை நிறை வாழ்வியலை

எந்த மொழி உரைத்து விடக்கூடும்”..?

என் நிம்மதியே..

மீளேலாத் துயரெல்லாம்

விதி என்று தெருள்கின்ற

காரியத் தெளிவல்லவா நீ

கடவுளின் மொழியல்லவா..!

ஆழத்தின் உருவும் நீ

ஞானத்தின் தெளிவும் நீ

ஊழியின் முடிவல்லவா நீ

உண்மையின் வடிவல்லவா..!

யாரென்ன நொந்தாலும்

யாரென்ன செய்தாலும்

பக்குவம் தருவாயடா

பாவ மன்னிப்பாய் வரு(ம்)வாயடா..!

நீ இல்லா இடமெல்லாம்

நிச்சயமாய்ச் சுடுகாடே

அட கொஞ்சம் பொறுப்பாயடா நீ

அங்கே தான் பிறப்பாயடா..!